பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
நாகையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர் ஜானிடாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோயில், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
2-வது கட்டமாக தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 30-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 2-நாட்களில் மொத்தம் 2,003 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் பார்வையாளராக ஜானிடாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி 11 ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 89250 42131, 85249 07782, 85249 07784 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story