திருக்கோவிலூரில், விஷம் குடித்த பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது
திருக்கோவிலூரில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 27). இவரது மனைவி மைதிலி(வயது 23). இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் மைதிலி திருக்கோவிலூர் சந்தப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபருடன் பழகினார். அவர்களிடையே நெருக்கம் அதிகரித்ததால், மைதிலி தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி மணிகண்டனுடன் பெங்களூருவுக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் சந்தப்பேட்டைக்கு திரும்பினார். அங்கு மணிகண்டனின் வீட்டுக்கு இருவரும் சென்று குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் இது மணிகண்டனின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மணிகண்டனுக்கும், மைதிலிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மணிகண்டன் தனது தந்தை வடிவேல், தாய் பட்டு, சகோதரி காஞ்சனா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு கர்ப்பிணி என்றும் பாராமல், ஈவு இரக்கமின்றி மைதிலியை ஆபாசமாக திட்டி, வீட்டைவிட்டு வெளியே துரத்தியுள்ளார்.
முதல் கணவனும் தன்னை அன்பாக வைத்திருக்கவில்லை, நம்பி வந்த கள்ளக்காதலுனும் குடும்பத்துடன் சேர்ந்து தன்னை கொடுமை படுத்துகிறாரே என்று மனம் வெதும்பிய மைதிலி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். அதன்படி கடந்த 9-ம் தேதி மைதிலி விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கர்ப்பிணியாக இருந்ததால், வயிற்றில் இருந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று கருதிய டாக்டர்கள், கடந்த 12-ந்தேதி மைதிலிக்கு ஆபரேசன் மூலம், குழந்தையை உயிருடன் எடுத்தனர்.
ஆனால் மறுநாளே குழந்தை பரிதாபமாக செத்தது. இந்த நிலையில் மைதிலியின் உடல் நிலை மேலும் மோசம் அடையவே அவரை சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மைதிலி பரிதாபமாக இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மணிகண்டன் மற்றும் அவரது தந்தை, தாய், சகோதரி ஆகியோர் மீது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் கள்ளக்காதலன் மணிகண்டன், அவரது அக்கா காஞ்சனா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது தந்தை வடிவேல், தாய் பட்டு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story