குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் - திண்டிவனத்தில் பரபரப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திண்டிவனத்தில் நேற்று 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்த சாமி அரசு கலை கல்லூரியிலும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்த படி தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்த ரோஷணை போலீசார் விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story