பிளஸ்-1 மாணவர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-1 மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவையை அடுத்த சூலூர் பாப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் ஹாலோபிளாக் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ராதேவி. இவர்களுடைய மகன்கள் ஹரீஷ் (17), சூர்யா (9).
இதில் ஹரீஷ் காரமடை கண்ணார்பாளையம் பகுதியில் உள்ள வித்யா விகாஸ் பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்தநிலையில் ஹரீஷ் நேற்று முன்தினம் காலையில் அரையாண்டு தேர்வு எழுதினார். அவர் வயிற்றுவலி என்று கூறி மதியம் விடுதிக்கு சென்றார். பின்னர் அவர், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக கிடந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் காரமடை போலீசில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஹரீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மாணவர் ஹரீசின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவர் இறந்தது குறித்து பள்ளி நிர்வாகத்தினா் தகவல் எதுவும் தெரிவிக்க வில்லை என்றும் கூறி உறவினர்கள் காரமடை போலீஸ்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே மாணவர் ஹரீசின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதனால் அங்கு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு மாணவரின் தந்தை குமார், தாய் சுமித்ராதேவி மற்றும் உறவினர்கள் அழுதுகொண்டே இருந்தனர்.
அவர்கள், மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து பிரேதபரிசோதனை அறை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள், கோவை கலெக்டர் அலுவலகம் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் நேற்று அவர்கள் ஹரீசின் உடலை பெற்றுச் செல்லவில்லை.
இது குறித்து மாணவர் ஹரீசின் உறவினர்கள் கூறியதாவது:-
ஹரீஷ் நன்றாக படிப்பவன். அவனுடைய உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. அவன் சிறுவயதில் இருந்தே கராத்தே, யோகா கற்று உள்ளான். எனவே அவன் தற்கொலை முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை. மேலும் அவன் கழுத்தில் உள்ள காயம் கத்தியைகொண்டு அறுத்தது போன்று உள்ளது. ஹரீசின் சாவு குறித்து பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.
அத்துடன் ஹரீசின் உடலை பள்ளி நிர்வாகமே மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் நேராக காரமடை போலீஸ்நிலையம் எடுத்து சென்று உள்ளனர். அதன்பின்னர் தான் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. எனவே ஹரீசின் சாவில் சந்தேகம் தீர்க்கப்படும் வரை அவனுடைய உடலை வாங்கமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மாணவனின் பெற்றோர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story