8-ந்தேதி வேலை நிறுத்தம்: 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் - நெய்வேலியில் நடந்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம்


8-ந்தேதி வேலை நிறுத்தம்: 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் - நெய்வேலியில் நடந்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 Dec 2019 3:45 AM IST (Updated: 21 Dec 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தையொட்டி கடலூர் உள்பட 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று நெய்வேலியில் நடந்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெய்வேலி,

தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிடக்கோரி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அடுத்த மாதம்(ஜனவரி) 8-ந்தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட ஆயத்த மாநாடு நெய்வேலி தொ.மு.ச. அலுவலகலத்தில் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி தலைமை தலைமைதாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் துரை, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் பலராமன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட குழு பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தொ.மு.ச. அகில இந்திய இணை பொது செயலாளர் சுகுமார், சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்க வேண்டும். மின்சாரம், அரசு போக்குவரத்து கூட்டுறவு நுகர்பொருள் ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து கட்டுமானம் போன்ற துறைகளில் வருகிற 25-ந்தேதிக்குள் (புதன்கிழமை) துறைவாரியாக அனைத்து சங்க கூட்டங்கள் நடத்தி வேலை நிறுத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, வருகிற 30-ந்தேதி முதல் ஜனவரி 4-ந் தேதி வரை தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் கோரிக்கைகளை விளக்கி வாகன பிரசாரம் செய்தல், வருகிற 8-ந்தேதி பொது வேலைநிறுத்த நாளன்று கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநிலக்குழு மோகன், சி.ஐ.டி.யு. மாவட்ட அமைப்பு தனவேல், சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், என்.எல்.சி.தொ.மு.ச. பொருளாளர் குருநாதன், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பழனிவேல், ஸ்டாலின், ஹென்றி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் குளோப் நன்றி கூறினார்.

Next Story