குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் விருத்தாசலம் பாலக்கரையில் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஜமாஅத் உலமா சபை கடலூர் மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் தலைமை தாங்கினார். முத்தவல்லிகள் அப்துல் மஜீத், ஷேக் தாவுது, அப்துல் ஹமீது, ஷேக் ஹவுஸ் மியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மதத்தால் மக்களை பிரிப்பதை கண்டித்தும், முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க கூடாது என வலியுறுத்தியும், இந்துத்துவத்தை நாட்டில் திணிப்பதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் முகமது அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், நகர ஐக்கிய ஜமாத் செயல் தலைவர் முகமது முஸ்தபா, துணைத்தலைவர்கள் சம்சுதீன், அபூபக்கர், ஜமாஅத்துல் உலமா சபை வட்டார செயலாளர் முகமது உஸ்மான், எஸ்.டி.பி.ஐ. தொகுதி தலைவர் முகமது ரபிக், த.மு.மு.க. காதர் ஷரிப், லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள். இதில் முத்தவல்லிகள் மற்றும் முஸ்லிம்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர ஐக்கிய ஜமாஅத் பொருளாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.
பண்ருட்டியில் அனைத்து மஹல்லா மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும் பேரணி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை காந்திரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி, காந்திரோடு, கடலூர் ரோடு வழியாக பஸ் நிலையம் அருகில் உள்ள இந்திரா காந்தி சாலையை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முத்தவல்லி இஸ்மாயில் ஹஜ்ரத், தி.மு.க.நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உதயகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சுமைதாங்கியில், மங்கலம்பேட்டை, எம்.அகரம், எடச்சித்தூர், பழையப்பட்டணம் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில், அனைத்து இஸ்லாமிய மற்றும் அனைத்து சமுதாய இயக்கங்கள், நகர தி.மு.க., இந்திய குடியரசு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, உலமாக்கள் சபையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கீழவீதி ஜாமிஆ பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் புறப்பட்டு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சுமைதாங்கி பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மங்காபிள்ளை, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச் செயலாளர் ஆபிருத்தீன் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி ராஜ்குமார், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ராஜாராம், வழக்கறிஞர்கள் இப்ராஹிம், குமரகுரு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அப்துல் பாரி நன்றி கூறினார். மேலும் மங்கலம்பேட்டையில் முஸ்லிம்கள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை நகர ஜமாத் சார்பில் கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். பொருளாளர் அமானுல்லா, செயலாளர் அப்துல் ரஷீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முன்னாள் ஜமாத்துல் உலமா மாநில தலைவர் அப்துல் ரகுமான் ஹஜ்ரத், முகமது காசீம் ஹஜ்ரத் உள்பட அனைத்து பள்ளி வாசல் முத்தவல்லிகள் ஜமாத்தார்கள், ஜே.எம்.ஏ. அரபிக்கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னதாக லால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் இருந்து லால்பேட்டை கைகாட்டி வரை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர். பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் மற்றும் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை, கடலூர் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் முஸ்லிம் இயக்கங்கள், அரசியல் கட்சியினர் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். முஸ்லிம் லீக் தலைவர் ராஜா ரஜிமுல்லா, ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துல் அஜ்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஜமாஅத்துல் உலமா சபை மண்டல பொறுப்பாளர் முகமது இஷ்காக் அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் முஸ்லிம் இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான் பேரூராட்சி பஸ்நிறுத்தம் அருகில் மந்தாரக்குப்பம் பள்ளி வாசல் செயலாளர் மதர்ஷா தலைமையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story