நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை - முறையாக சம்பளம் வழங்க கோரிக்கை


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை - முறையாக சம்பளம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2019 4:00 AM IST (Updated: 21 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

முறையாக சம்பளம் வழங்கக்கோரி, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் குறிப்பிட்ட நாளில் வழங்கப்படாமல், பல நாட்கள் கழித்து வழங்கப்படுகிறது. புதிய சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் போட்டனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனுவை, மாநகராட்சி ஆணையாளர் கண்ணனிடம் வழங்கினார்கள்.

அந்த மனுவில், நெல்லை மாநகராட்சியில் 43 சுய உதவிக்குழுக்கள் மூலம் 750-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படக்கூடிய சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை.

சம்பளம் மாதமாதம் முறையாக வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்படவில்லை, பிடித்தம் செய்யக்கூடிய வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story