ஊரக உள்ளாட்சி தேர்தல்: சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி - தேர்தல் பார்வையாளர் பிரபாகர் ஆய்வு
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை தேர்தல் பார்வையாளர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக புதுச்சத்திரம் அருகே உள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையினை தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார்.
அப்போது புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வாக்குகள் பதிவான வாக்குப்பெட்டிகளை வைக்க போதுமான இடவசதி உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த வாக்குகள் எண்ணும் அறைகளையும் பார்வையாளர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகளை வைப்பதற்கான உறுதியான அறையினையும் தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார்.
இதற்கிடையே புதுச்சத்திரம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியினை தேர்தல் பார்வையாளர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) சிவசண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story