10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: மோதிரத்தை அடகு வைத்து செலவு செய்ததை - தந்தை கண்டித்ததால் விரக்தி


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: மோதிரத்தை அடகு வைத்து செலவு செய்ததை - தந்தை கண்டித்ததால் விரக்தி
x
தினத்தந்தி 21 Dec 2019 5:15 AM IST (Updated: 21 Dec 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

மோதிரத்தை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை தோழிகளுடன் செலவு செய்ததை தந்தை கண்டித்ததால் விரக்தி அடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

பூந்தமல்லி,

சென்னை கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 41-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா (வயது 17), புவனேஸ்வரி (14) என 2 மகள்கள்.

அதே பகுதியில் உள்ள பள்ளியில் லாவண்யா 12-ம் வகுப்பு படித்து வருகிறார். புவனேஸ்வரி, 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கணவன்-மனைவி இருவரும் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டனர். லாவண்யாவும் பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் புவனேஸ்வரி பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாவண்யா, வீட்டுக்கு வந்து பார்த்தபோது படுக்கை அறையில் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறினார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், புவனேஸ்வரி வீட்டில் இருந்த தந்தையின் மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று அடகு கடையில் வைத்து பணம் பெற்று அதனை தனது தோழிகளுடன் சேர்ந்து செலவு செய்து விட்டதாகவும், இதையறிந்த சண்முகம் நேற்றுமுன்தினம் இரவு தனது மகள் புவனேஸ்வரியை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் விரக்தி அடைந்த புவனேஸ்வரி, தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story