அமைதியை சீர்குலைக்கும் வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் ; எடியூரப்பா வேண்டுகோள்
மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு தயாராக இருப்பதாகவும், அமைதியை சீர்குலைக்கும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர். இதனால் மங்களூருவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில மக்கள் அமைதி காக்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிலர் சுயநலத்திற்காக வதந்திகள் பரப்புகிறார்கள். மக்களின் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புகிறார்கள். உங்களிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். குடியுரிமை திருத்த சட்டம், எந்த வகையிலும் இந்திய குடிமக்களை பாதிக்காது.
அதனால் அமைதியை விரும்பும் கர்நாடகத்தின் புகழை கெடுக்கும் வகையிலான செய்திகளை, வதந்திகளை யாரும் நம்பாதீர்கள். சாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசு தயாராக உள்ளது. மங்களூருவில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகை யாளர்கள், போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு அந்த மாநில எல்லைக்குள் விடப்பட்டுள்ளனர்.
நான் மற்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் நாளை (அதாவது இன்று) சனிக்கிழமை மங்களூரு செல்கிறோம். அங்கு நடந்த வன்முறை மற்றும் தற்போது நிலவும் சூழ்நிலை ஆகிய விவரங்களை பெற உள்ளோம். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இன்று முடிவு செய்யப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story