தஞ்சை அருகே, ஜல்லிக்கட்டு காளைக்கு நண்பனாக இருந்து பயிற்சிக்கு அழைத்து செல்லும் நாய்
தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு நண்பனாக இருந்து வரும் நாய், காளையை பயிற்சிக்கு அழைத்து சென்று வருகிறது.
தஞ்சாவூர்,
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. அதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தடை நீக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தங்களது காளைகளை தயார் செய்யும் பணியில் காளைகளின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு ஊராட்சியில் உள்ளது பொட்டுவாச்சாவடி கிராமம். இந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 25-க்கும் மேற்பட்ட காளைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக காளைகளுக்கு பல்வேறு விதமான பயிற்சியும் அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து இந்த பயிற்சிகளை தொடங்கி விடுகின்றனர்.
இதற்காக ஜல்லிக்கட்டுகாளைகளுக்கு கொட்டகை அமைத்து மின்விசிறியும் போடப்பட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்றார்போல் பழக்குகின்றனர். மாடுகளை தங்கள் குழந்தைகள்போல் வளர்த்து எந்தவித வருமான ஆதாயத்திற்காக இல்லாமல் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், காளை இனங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிகட்டு காளைகள் வளர்க்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உணவாக பருத்திக்கொட்டை, தவிடு, புண்ணாக்கு, புல், வைக்கோல் ஆகியவை வழங்கப்படுகிறது. மாடுகளின் கொம்பை போட்டிக்கு முன்னதாகவே சீவி விடுகின்றனர்.
பின்னர் மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி, அதிவேக நடைப்பயிற்சி, மண்ணில் கொம்பை குத்தும் பயிற்சி, மாடு பாய்ச்சல் ஆகிய பயிற்சிக்கு தயார் செய்கின்றனர். இந்த பயிற்சி தினமும் காலை 6 மணிக்கு தொடங்கி 1 மணி முதல் 2 மணி நேரம் வரை நடக்கிறது.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க...
மேலும் மாடுகளின் உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை பிரண்டை, பட்ட மிளகாய், சின்ன வெங்காயம், கடலை மிட்டாய் ஆகியவற்றையும் வழங்கி மாடுகளின் உடல் நலத்தையும் பாதுகாத்து வருகிறார்கள்.
கொசுக்கடியிலிருந்து தப்பிக்க மாடுகளுக்கு மின்விசிறியும் போடப்பட்டு மாடுகளை பழக்குகின்றனர்.
இந்த ஊரில் அரவிந்த் என்பவரும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இவருடைய ஜல்லிக்கட்டு காளைக்கு ஆதரவாக அவருடை நாயும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பயிற்சிக்கு மாட்டை அழைத்துச்செல்வது, மாட்டுடன் நடைபயிற்சி செய்வது, நீச்சல் பயிற்சி மேற்கொள்வது போன்ற பயிற்சிகளையும் செய்து வருகிறது. மேலும் மாடு அருகில் வேறு யாரும் சென்று விடாத வகையிலும் நாய் பாதுகாத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு காளைக்கு நண்பனாக நிற்கும் நாய், அந்த காளை எங்கு சென்றாலும் இணை பிரியாமல் செல்வதுடன், போட்டியில் கலந்து கொண்டாலும் பின்தொடர்ந்து செல்கிறது. இந்த பாசம் பொதுமக்களையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வரும் பாஸ்கர் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் பலர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்கள். எனது தாத்தா, தந்தை ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தனர். தற்போது நான் வளர்த்து வருகிறேன். நான் மட்டும் 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறேன்.
இந்த ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் குழந்தைகள்போல் வளர்த்து எந்தவித வருமான ஆதாயத்திற்காக இல்லாமல் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கில் வளர்த்து வருகிறோம்.
மதுரை, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் காளைகளை பங்கேற்க செய்து வருகிறோம். போட்டி நடைபெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்பில் இருந்து இந்த பயிற்சியை தொடங்கி விடுவோம். தினமும் 1 மணி அல்லது 2 மணி நேரம் காலை வேளைகளில் பயிற்சி அளிப்போம். போட்டியில் பங்கேற்று தங்களது காளைகள் பிடிபடாமல் இருந்தாலே அதற்கு ஒரு செல்வாக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story