உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த 32 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகிறது - கலெக்டர் ராமன் தகவல்


உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த 32 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகிறது - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2019 10:45 PM GMT (Updated: 20 Dec 2019 9:08 PM GMT)

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக 32 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 288 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள், 385 கிராம ஊராட்சி தலைவர்கள், 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 299 பதவிகளுக்கு 13 ஆயிரத்து 923 பேர் போட்டியிடுகிறார்கள்.

இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சிகளை சேர்ந்த சின்னங்களுடன் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் மாவட்டம் முழுவதும் 11 அச்சகங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி சேலம் அணைமேடு சங்கராலயா ரோட்டில் உள்ள சேலம் கூட்டுறவு அச்சகத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியினை கலெக்டர் ராமன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அச்சகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என்றும், தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால் கட்சி சார்புடைய தேர்தல்களான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுமார் 16 லட்சம் மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுமார் 16 லட்சம் பச்சை நிற வாக்குச் சீட்டுகளும் என மொத்தம் சுமார் 32 லட்சம் வாக்குச்சீட்டுகள் சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 அச்சகங்களில் வேட்பாளர்களின் சின்னங்களோடு அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த அச்சகங்களில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகளை முழுமையாக கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அந்த அச்சகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருவதோடு காவல்துறையின் பாதுகாப்பும் ஒவ்வொரு அச்சகத்திற்கும் தனித்தனியாக போடப்பட்டுள்ளது.

மேலும், கட்சி சார்பற்ற தேர்தல்களான கிராம ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கு சுமார் 16 லட்சம் வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுமார் 16 லட்சம் வாக்குச்சீட்டுகளும் என மொத்தம் சுமார் 32 லட்சம் வாக்குச்சீட்டுகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் சின்னங்களோடு அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு வைசியா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டு வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் உதவி கலெக்டர் மாறன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story