திருமணத்துக்கு வற்புறுத்தியதால் குவாரியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்தேன் - கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை குவாரி மேலிருந்து கீழே தள்ளி கொலை செய்தேன் என கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூர்,
வேலூரை அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் நிவேதா (வயது 17), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை கேன்டீனில் பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ந் தேதி அவர் மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே கடந்த 18-ந் தேதி நிவேதா கொலை செய்யப்பட்ட நிலையில் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ரங்காபுரம் மூலக்கொல்லை தென்றல்நகரை சேர்ந்த ஆட்டோடிரைவரான பிரகாஷ் (23) மற்றும் அவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த நவீன்குமார் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஆட்டோ டிரைவரான பிரகாஷூம், நிவேதாவும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்தனர். இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பிரகாஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிவேதா வற்புயுறுத்தி உள்ளார். ஆனால் அவர் இதற்கு மறுத்துள்ளார். மேலும் நிவேதாவின் நடத்தையில் பிரகாஷ் சந்தேகம் கொண்டுள்ளார்.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள நிவேதா வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய பிரகாஷ் திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த 14-ந் தேதி அன்று, நிவேதாவிடம் நான் உன்னை சந்திக்க வேண்டும் வேலூர் புதிய பஸ் நிலையம் வா என பிரகாஷ் அழைத்துள்ளார். நிவேதா ஆட்டோவில் அங்கு சென்றுள்ளார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில்இருந்து ஆட்டோவில் நிவேதாவை ஏற்றிக் கொண்டு புதுவசூர் கல்குவாரி நோக்கி பிரகாஷ் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசி உள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நிவேதா வற்புயுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அவரை மேலே இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.
பின்னர் கொலையை மறைக்க தனக்கு உதவுமாறு நண்பன் நவீன்குமாரின் உதவியை பிரகாஷ் நாடினார். நவீன்குமாரும் கொலையை மறைக்க பல்வேறு யோசனைகளை வழங்கி உள்ளார். அதன்படி பிரகாஷ், நிவேதாவின் செல்போனை எடுத்து அருகில் இருந்த கல்குவாரி குட்டையில் வீசி உள்ளார்.
அதன்பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். நிவேதா பிணம் மீட்கப்பட்டதை அடுத்து விசாரணையை வேகப்படுத்தினோம். அவரின் நண்பர்கள், தோழிகள், பெற்றோர் என பலரிடம் விசாரணை மேற்கொண்டோம். அதில் பிரகாஷ், நவீன்குமார் மற்றும் 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. 4 பேரையும் பிடித்து வந்து விசாரணை செய்தோம். அதில் நிவேதா, பிரகாஷ் காதல் விவகாரம் தெரியவந்தது. நிவேதா திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் அவரை கொலையை செய்ததாக பிரகாஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த நவீன்குமாரையும் கைது செய்துள்ளோம். நிவேதாவின் செல்போனை நாங்கள் தேடினோம். கிடைக்கவில்லை.
நிவேதா கற்பழிக்கப்பட்டு, பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்த தகவல் அவரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story