மங்களூரு சம்பவத்திற்கு தேவேகவுடா கண்டனம் ; அப்பாவிகளை சுட்டு கொல்ல வேண்டாம் என வேண்டுகோள்


மங்களூரு சம்பவத்திற்கு தேவேகவுடா கண்டனம் ; அப்பாவிகளை சுட்டு கொல்ல வேண்டாம் என வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:15 AM IST (Updated: 21 Dec 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேவேகவுடா, அப்பாவிகளை சுட்டு கொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் பிரதமர் தேவேகவுடா கேரளாவில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மங்களூரு வன்முறை சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மங்களூருவில் நடந்த வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவிகள் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். வன்முறை சம்பவங்களை தூண்டிவிடும் வகையில் அரசின் மந்திரிகளே கருத்து தெரிவிக்கிறார்கள். இதை கண்டிக்கிறேன். நான் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி பாரூக் மங்களூருவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

அவர் எனக்கு தகவல்களை தந்து வருகிறார். மக்கள் அமைதி காக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசின் கடமை. அதிகாரிகள் மூலம் மக்களுக்கு விளக்கம் அளிப்பதை விட்டு தடை உத்தரவை பிறப்பித்து மக்களின் போராட்டம் நடத்தும் உரிமையை பறித்துக்கொள்வது சரியல்ல.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசுகளின் கடமை. அமைதியை குலைப்பவர்களை கண்டறிந்து கைது செய்யுங்கள். ஆனால் அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டாம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் உடலுக்கு மரியாதையான முறையில் இறுதிச்சடங்கு நடைபெற உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Next Story