ஊரக உள்ளாட்சி தேர்தல்: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


ஊரக உள்ளாட்சி தேர்தல்: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:15 AM IST (Updated: 21 Dec 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 128 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களில் உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 7 பஞ்சாயத்து யூனியன்களிலும், 2-வது கட்டமாக 5 பஞ்சாயத்து யூனியன்களிலும் நடக்கிறது. மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக 1,818 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 128 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 15 முதல் 20 வாக்குச்சாவடிகள் இருக்கும். மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்து கொண்டு செல்ல வரைபடம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மாற்று வழியிலான வரைபடத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும்.

மண்டல அலுவலர்கள் முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு மின்சாரம், சாய்தளம், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்ட தேர்தலுக்கு 26-ந் தேதி பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் இருந்து ஓட்டு பெட்டி உள்ளிட்ட வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒப்படைக்க வேண்டும். வாக்குப்பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் சென்று தீர்த்து வைக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மண்டல அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுடன் தொடர்பில் இருந்து கவனத்துடன் பணியாற்ற வேண்டும். நமது மாவட்டத்தில் 374 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை மற்றும் மிக பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்புடன் எடுத்துச்சென்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இப்பயிற்சியின்போது தங்களுக்கு தெரிவிக்கப்படும் கருத்துகளை தெரிந்து கொண்டும், வழங்கப்படும் கையேட்டினை முழுமையாக படித்து ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஆல்பர்ட் ஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story