தடை உத்தரவுக்கு எதிராக பொதுநல வழக்கு: அனைத்து போராட்டங்களையும் தடை செய்ய போகிறீர்களா? மாநில அரசுக்கு ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
கர்நாடக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, அனைத்து போராட்டங்களையும் தடை செய்ய போகிறீர்களா? என்று மாநில அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெங்களூரு,
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகத்திலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் முதல் 3 நாட்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இந்த தடை உத்தரவை மீறி மங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அமைதி வழியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ்கவுடா எம்.பி., சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், “குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். அதன் பிறகு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறி அனுமதியை ரத்து செய்துவிட்டனர். அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது சரியல்ல. இதுகுறித்து போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா, “கர்நாடகத்தில் அனைத்து போராட்டங்களையும் தடை செய்ய போகிறீர்களா?. போராட்டம் நடத்த அனுமதி வழங்கிவிட்டு பிறகு அதை எப்படி ரத்து செய்ய முடியும்?. ஒவ்வொரு போராட்டத்திலும் வன்முறை ஏற்படும் என்று அரசு கருதுகிறதா?. அரசின் முடிவை ஏற்காத ஒரு எழுத்தாளரோ அல்லது ஒரு கலைஞரோ அமைதியாக போராட அனுமதி இல்லையா?. போலீசார் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு சரியானதுதானா? என்பதை விசாரிப்போம்“ என்றார்.
போராட்டம் நடத்துபவர்கள் அனுமதி கேட்டு மீண்டும் போலீசாரை அணுகலாம் என்றும், அதை பரிசீலித்து 3 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story