குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பினர் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பினர் கண்டன பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. முன்னதாக உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத், திருப்பூர் வட்டார ஐக்கிய ஜமாஅத், வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் யுனிவர்செல் தியேட்டர் அருகே நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்துக்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கவுரவ ஆலோசகர் அப்துல் கரீம் தலைமை தாங்கினார். செயலாளர் ரியாஜூத்தீன் முன்னிலை வகித்தார். அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் அப்துல் மஜீத் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட சுன்னத் ஜமாஅத் மாவட்ட தலைவர் ஜகரிய்யா தொடங்க உரையாற்றினார்.
கூட்டத்தில் திருப்பூர் தொகுதி சுப்பராயன் எம்.பி., கோவை தொகுதி பி.ஆர்.நடராஜன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி, மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரான தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெக்லான் பாகவி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முகமது யாசர், தி.மு.க. மாநில தேர்தல் பணி செயலாளர் செல்வேந்திரன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில், ஐ.என்.டி.ஜே. தேசிய தலைவர் பாக்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
திருப்பூர் தி.மு.க. கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டம் நடந்த யுனிவர்செல் தியேட்டர் ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முன்னதாக திருப்பூரில் பல பகுதிகளில் இருந்து முஸ்லிம் அமைப்பினர் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே வந்த முஸ்லிம் அமைப்பினர் மோடி, அமித்ஷாவின் உருவ பொம்மையை கொண்டு வந்தனர்.
இதை கவனித்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு உருவ பொம்மையை எரிக்க விடாமல் பறித்தனர். ஆனால் மற்றொரு உருவ பொம்மையை தீப்பற்ற வைத்தனர். அதற்குள் அந்த உருவ பொம்மையையும் போலீசார் கைப்பற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story