கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: 2-வது நாளாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து


கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: 2-வது நாளாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 20 Dec 2019 10:29 PM GMT (Updated: 20 Dec 2019 10:29 PM GMT)

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக நேற்று 2-வது நாளாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை முதல் மழை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயத்தை காணமுடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காலை 8 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், ராட்சத அலைகள் எழுந்து ஆவேசத்துடன் கரை பகுதியில் உள்ள பாறைகளில் ேமாதி சிதறியது. இதைகண்டு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சுற்றுலா போலீசார் விரைந்து சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனே வெளியேற்றினர். மேலும், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை காண காலை 6 மணி முதல் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முன் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கடல் சீற்றம் காரணமாக 8 மணியளவில் தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு பலகை நுழைவுவாயிலில் வைக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர்ந்து மழை பெய்தபடி இருந்ததால் சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களிலேயே முடங்கி கிடந்தனர். பின்னர், சீற்றம் குறையாததால்2-வது நாளாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், புதுகிராமம், சிலுவைநகர், வாவத்துறை, கோவளம், மணக்குடி, கீழ மணக்குடி ஆகிய கிராமத்தை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மேலும், மீனவர்கள் தங்களது படகுகளை மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினர்.

Next Story