பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது - வடமாநில தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது - வடமாநில தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 4:30 AM IST (Updated: 21 Dec 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக வடமாநில தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம், 

மேற்குவங்க மாநிலம் பர்டாமன் நகரைச் சேர்ந்தவர் ஆரூன்சேக். இவருடைய மகன் பாபு என்கிற பாபர்அலி (வயது 24). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம், கட்டிட வேலைக்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூருக்கு வந்தார். கட்டிட வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே தொழிலாளி ஒருவர் வசித்து வந்தார். அந்த தொழிலாளிக்கு மனைவியும், 17 வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர்.

பாபர்அலிக்கு முதலில் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் அடிக்கடி தொழிலாளியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த சிறுமியிடம் பாபர்அலி பேசி பழகி வந்துள்ளார். இருவரும் பேசி பழகியதை குடும்பத்தினர் தவறாக கருதவில்லை.

இந்த நிலையில் பாபர்அலி, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவரை மயக்கி உள்ளார். அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாதபோது, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. பாபர்அலியின் மிரட்டலுக்கு பயந்த சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.

பாபர்அலி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பம் தரித்துவிட்டார். 7 மாதம் வரை சிறுமியின் பெற்றோருக்கு மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவில்லை. அதன் பிறகு மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் விசாரித்ததில் கர்ப்பத்திற்கு காரணம் பாபர்அலி என்று கூறி விட்டார். உடனே சிறுமியின் பெற்றோர் பாபர்அலியை தேடிச்சென்றனர். தகவல் அறிந்த பாபர்அலி அங்கு இருந்து தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் சிறுமிக்கு நேற்று முன்தினம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த பாபர்அலியை கண்டுபிடித்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story