பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசின் நண்பர்களாக மாறுவார்கள்; சிவசேனா சொல்கிறது


பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசின் நண்பர்களாக மாறுவார்கள்; சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 21 Dec 2019 5:37 AM IST (Updated: 21 Dec 2019 5:37 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசின் நண்பர்களாக மாறுவார்கள் என சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன் அப்போதைய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பலர் அரசியல் ஆதாயம் கருதி பாரதீய ஜனதாவில் சேர்ந்தனர். ஆட்சி அதிகாரம் கைநழுவிய நிலையில் தற்போது, பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து உள்ளது. இந்த நிலையில், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தின் நண்பர்களாக மாறுவார்கள் என சிவசேனா தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா'வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மனமும், அவரது தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கங்களும் சுத்தமாகவும், உண்மையானதாவும் இருக்கின்றன. எனவே அவர் தொடர்ந்து புதிய நண்பர்களை பெறுவார். எதிர்க்கட்சியை(பா.ஜனதா) சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இந்த அரசாங்கத்தின் நண்பர்களாக மாறக்கூடும். எனவே எதிர்க்கட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முன்பு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள் இப்போது ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்து உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே பகை இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அது நல்லது அல்ல. பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்து ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் அந்த கட்சி அசவுகரியமாக உணருகிறது. இதை பாரதீய ஜனதா புறக்கணித்து விடுவது நல்லது. இந்த அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். அவர் கூறியபடி அந்த தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி இருந்தால் அவர்கள் தங்களது கடனை அடைத்து இருப்பார்கள். மகிழ்ச்சியாகவும் இருந்து இருப்பார்கள்.

மத்திய பாரதீய ஜனதா அரசாங்கம் தான் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறது. முதலில் அவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தேவேந்திர பட்னாவிஸ் பேசுவது தேவையற்றது என மாநில மக்கள் கருதுகின்றனர். பாரதீய ஜனதா ‘சத்யமேவ ஜயதே' (வாய்மையே வெல்லும்) பின்பற்றி இருந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story