மராட்டியத்தில் 4 மாவட்டங்களில் வன்முறை; 12 பேர் காயம்; பஸ்கள் உடைப்பு


மராட்டியத்தில் 4 மாவட்டங்களில் வன்முறை;  12 பேர் காயம்; பஸ்கள் உடைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 5:53 AM IST (Updated: 21 Dec 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 மாவட்டங்களில் திடீர் வன்முறை ஏற்பட்டது. கல்வீச்சில் தாசில்தார், போலீசார் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

மும்பை, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று ஹிங்கோலி, நாந்தெட், பீட், பர்பானி மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

ஹிங்கோலி மாவட்டம் கலம்னுரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 7 பஸ்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள்.

இதில் பஸ்சில் இருந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர். இதேபோல அங்கு நடந்த மற்றொரு போராட்டத்தில் கல்வீச்சில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் உள்ள யஸ்வந்த்ராவ் சவான் சவுக்கில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பர்பானியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் தீயணைப்பு வாகனத்தை கல்வீசி தாக்கினார்கள். இந்த சம்பவங்க ளில் தாசில்தார் வித்யாசரண் மற்றும் 7 போலீசாரும் காயம் அடைந்தனர்.

நாந்தெட்டில் ரெயில் நிலையம் அருகில் நின்ற பஸ்சை போராட்டக்காரர்கள் சேதப் படுத்தினர். வன்முறை காரணமாக அந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களால் பெரும் பரபரப்பு உண்டானது.

புனேயில் நடந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

தானே மாவட்டம் பிவண்டி, ரபோடி உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் வதந்தி மற்றும் போலியான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம் என மராட்டிய போலீஸ் டுவிட்டரில் கேட்டுக்கொண்டு உள்ளது.


Next Story