வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தது


வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தது
x
தினத்தந்தி 22 Dec 2019 3:30 AM IST (Updated: 21 Dec 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு எகிப்து நாட்டு வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

வேலூர், 

மராட்டியம், கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்கு வெங்காய பயிர்கள் அழிவை சந்தித்தன. அதனால் தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்தது. அதன்காரணமாக வெங்காயத்தின் விலை கிடு, கிடு வென உயர்ந்தது.

வேலூர் மார்க்கெட்டில்அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காய விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வெங்காய விலையை குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை கப்பல் மூலம் மத்திய அரசு இறக்குமதி செய்தது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் ெசன்னை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டன.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் வெங்காயத்தை போன்று அல்லாமல் அளவில் மிகவும் பெரியதாக காணப்பட்ட எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் இந்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தினால் சுவை மாறுவதாகவும் பலர் கூறினர்.

இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு எகிப்து வெங்காயம் நேற்று விற்பனைக்கு வந்தது. பெங்களூருவில் இருந்து லாரியில் 10 மூட்டை எகிப்து வெங்காயம் கொண்டு வரப்பட்டது. பெரிய அளவிலான எகிப்து வெங்காயம் அதிகபட்சமாக 750 கிராம் எடையிலும், சிறிய அளவிலான வெங்காயம் 250 கிராம் எடையிலும் காணப்படுகிறது. ஒரு கிலோ ரூ.100 என்ற விலையில் 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. மராட்டிய, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

எகிப்து வெங்காயம் பெரிய அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஒரு கிலோ என்று சில்லரை விலையில் விற்பனை செய்யப்படவில்லை. 5 கிலோ மற்றும் அதற்கு மேல் வாங்கினால் மட்டுமே சில்லரையில் வழங்கப்படுகிறது. விருதம்பட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக 5 மூட்டை வெங்காயத்தை ஒருவர் மொத்தமாக வாங்கி சென்றார். மேலும் ஓட்டல் உரிமையாளர்களும் வாங்கி செல்கின்றனர் என்று நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் பாலு தெரிவித்தார்.

Next Story