திருப்பத்தூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்-கடைகள் அடைப்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திருப்பத்தூரில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனையொட்டி அவர்கள் கடையடைப்பிலும் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மீலாது சவூக் கோட்டை ஆலமரம் பகுதியிலிருந்து அனைத்து ஜமாத், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஊர்வலமாக வந்து ஆலங்காயம் ரோடு அம்பேத்கார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காலை 9 மணியிலிருந்து அங்கு வர தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியில் உள்ள நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது அந்த வழியே போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஜமாத் தலைவர் கே அன்வர் சாகிப் தலைமை வகித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுந்தரேசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ரா. சுபாஷ்சந்திரபோஸ், திராவிடர் கழக பிரமுகர் கே.சி.எழிலரசன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கிஷோர் பிரசாத், ஜமாத் ஒருங்கிணைப்பாளர் அஸ்லம்பாஷா இஸ்லாமிய பிரசார பேரவை மாநிலத் துணைச் செயலாளர் சனாவுல்லா தன்சிம், ஜமாத் உறுப்பினர் ஆசிப் கான் உள்பட பலர் பேசினர்.
அப்போது அவர்கள் ‘‘குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். முடிவில் பூராமஜித் செயலாளர் எம்.எஸ்.மசூத்அகமது நன்றி கூறினார். பின்னர் இஸ்லாமிய நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அனந்த கிருஷ்ணனிடம் மனுவாக அளித்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி அனைத்து முஸ்லிம் பிரமுகர்களின் கடைகள், வணிக நிறுவனங்கள், நகைக்கடை பஜாரில் உள்ள கடைகள், ஆலங்காயம் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, பஸ் நிலையம், பெரிய கடைத்தெரு என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தேசிய ஒருமைப்பாட்டு பாடலும் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு தேசிய கீதமும் ஒலிபரப்பப்பட்டது, ஊர்வலத்தின்போது 20 அடி அகலம் கொண்ட பெரிய தேசியக் கொடியை ஏந்தி வந்தனர்.
Related Tags :
Next Story