குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தபால் நிலையத்தை திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயற்சி


குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தபால் நிலையத்தை திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 22 Dec 2019 4:15 AM IST (Updated: 22 Dec 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் கழகத்தினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திராவிடர் கழக மாணவர் அணி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தலைமை தபால் நிலைய நுழைவு வாயில் இரும்பினால் ஆன தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை ரெயில் நிலையம் அருகில் இருந்து திராவிடர் கழக மாணவர் அணியினர் ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக திராவிடர் கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர். இவர்கள் தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலையில் நின்று கொண்டே மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு மாநில மாணவரணி அமைப்பாளர் செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார்.

25 பேர் கைது

மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் அருணகிரி, ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், தலைமை கழக பேச்சாளர்கள் பெரியார் செல்வம், அதிரடி அன்பழகன், மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து மினிபஸ்சில் ஏற்றி சென்றனர். மொத்தம் 2 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story