நெல்லையில் தொழிலாளர் நலமையம் சார்பில் இலவச தையல் பயிற்சி; விண்ணப்பிக்க வேண்டுகோள்
நெல்லை தொழிலாளர் நல மையம் அமைப்பாளர் சூ.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் திருமணமாகாத சகோதரிகள் மற்றும் மனைவிகளுக்கு, நெல்லை தொழிலாளர் நல மையம் சார்பில் இலவச தையல் பயிற்சியும், உதவி தொகையும் வழங்கப்பட உள்ளது. 5-ம் வகுப்பும், அதற்கு மேலும் படித்தவர்கள், 16 வயது பூர்த்தியானவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள். வருகிற ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு வருட காலத்துக்கு பயிற்சி நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மதியம் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை ஆகிய நேரங்களில் பயிற்சி நடக்கிறது. மாதத்துக்கு 150 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தையல் பயிற்சி, துணி வெட்டும் பயிற்சி, பூத்தையல் போன்ற பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. பயிற்சியின் முடிவில், தகுதியுள்ள மாணவிகள் அரசு தேர்வுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வு கட்டணம் வாரியத்தால் செலுத்தப்படும்.
தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக தையல் எந்திரம் பரிசாக வழங்கப்படும். சூ.தமிழ்செல்வி (அமைப்பாளர்), தொழிலாளர் நல மையம், 50/28 நியூ காலனி, பேராட்சியம்மன் கோவில் தெரு, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி- 627003 என்ற முகவரியில் நேரடியாக வந்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். குறைவான இடங்களே இருப்பதால் விண்ணப்பங்களை உடனடியாக பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 99941 72668 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story