குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்தது முதல்-அமைச்சரின் முடிவாகும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்தது முதல்-அமைச்சரின் முடிவாகும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளாங்கோவில், சிறுவலூர், அயலூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேலும் அங்குள்ள பள்ளிக்கூட குழந்தைகளிடம், அடுத்த ஆண்டு முதல் உங்களுக்கு காலணிக்கு பதில் ஷு வழங்கப்படும். அரசு பள்ளிக்கூட குழந்தைகளுக்கும் ஆங்கிலம் கற்று கொடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்குள் ஆய்வு முடிந்து விட்டதை போல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவது நியாயமாக இருக்காது.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது முதல்-அமைச்சரின் முடிவாகும். அரசர் காலத்தில் நடைபெற்ற குடிமராமத்து திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறந்த கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பேட்டியின் போது மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story