பெண்களை தாக்கிய விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் - ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பெண்களை தாக்கிய விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் - ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 4:15 AM IST (Updated: 22 Dec 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

பெண்களை தாக்கிய விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீ்ர்ப்பு கூறியது.

ஈரோடு, 

கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலம் அங்கயகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பூசமுத்து. இவருடைய மகன் பி.நாச்சிமுத்து (வயது 45). விவசாயி. இவருக்கு வாய்க்கால் மேட்டுத்தோட்டம் பகுதியில் விவசாய நிலமும், வீடும் உள்ளது. இவரது தோட்டத்தின் அருகில் பழனியப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. 2 பேரின் தோட்டத்துக்கு செல்ல பொது வழித்தடம் ஒன்று இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 30-3-2017 அன்று பழனியப்பன், அவருடைய மனைவி மாரியம்மாள், மகள் நிர்மலா உள்பட 10 பேர் நாச்சிமுத்துவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது நாச்சிமுத்து, அவருடைய மனைவி ஷர்மிளா(34), மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் பத்மாவதி, அத்தை சுப்பாத்தாள் உள்ளிட்டவர்கள் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த பழனியப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் தோட்டத்து பொது வழித்தடபிரச்சினையைப்பற்றி பேசி நாச்சிமுத்துவை தாக்கினார்கள்.

அதை தடுக்க வந்த சாமியாத்தாள், ஷர்மிளா, பத்மாவதி ஆகியோர் மீது பழனியப்பனுடன் வந்தவர்கள் மிளகாய்ப்பொடி தூவி, மண்வெட்டி பிடியால் அடித்தனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், 3 பெண்களை தாக்கிய குற்றத்துக்காக பழனியப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட விவசாயி பழனியப்பனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறி இருந்தார். அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும், அபராத தொகை ரூ.25 ஆயிரத்தை தாக்குதலில் காயம் அடைந்து பாதிக்கப்பட்ட சாமியாத்தாளுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி மாலதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாரியம்மாள், நிர்மலா ஆகியோருக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தும், அபராத தொகை செலுத்த தவறினால் 2பேரும் தலா 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.

Next Story