குன்னூர் அருகே, சாலை வசதி இல்லாததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
குன்னூர் அருகே, சாலை வசதி இல்லாததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் டெரேமியா குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் உள்ளனர். டெரேமியா குடியிருப்பு பகுதி மேலூர் ஊராட்சியின் 8-வது வார்டுக்கு உட்பட்டது ஆகும்.
இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல டெரேமியாவில் இருந்து தூதுர்மட்டம் வரையுள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை 3 அடி அகலத்தில் மண் சாலையாகவும் பழுதடைந்த நிலையிலும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல ஆண்டுகளாக மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகிறார்கள்.
ஆஸ்பத்திரி போன்ற அவசர தேவைக்கு செல்ல வாகன வசதி இல்லாமல் உள்ளது. இது குறித்து பல முறை புகார் செய்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சாலை வசதி வேண்டி டெரேமியா குடியிருப்பு பகுதி மக்கள் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர்.
மேலும் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தூதுர் மட்டத்திலிருந்து எங்கள் கிராமமான டெரேமியா வரையுள்ள சாலை கரடு, முரடாக பழுதடைந்து உள்ளது. எங்கள் கிராமத்திற்கு இதுவரை ஆம்புலன்சுகள் வரமுடியாத நிலையில் உள்ளது. அதனால் நோயாளிகளை தொட்டில் கட்டி தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம். டெரேமியா கிராமத்திற்கு சாலை வசதி செய்ய கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாலை வசதி இல்லாததை கண்டித்து, ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் வகையிலும், வேட்பாளர்கள் யாரும் கிராமத்திற்குள் வரக்கூடாது என்பதற்காகவும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story