முன்னாள் சிறைவாசிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது - வேலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி குணசேகரன் அறிவுரை


முன்னாள் சிறைவாசிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது - வேலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி குணசேகரன் அறிவுரை
x
தினத்தந்தி 22 Dec 2019 3:45 AM IST (Updated: 22 Dec 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் சிறைவாசிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வேலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி குணசேகரன் கூறினார்.

வேலூர், 

தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டக்கிளை சார்பில் முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆப்காவில் பயிற்சி பெறும் சிறை அலுவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை செயல்விளக்கம் வேலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கினார். வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி குணசேகரன் கலந்து கொண்டு முன்னாள் சிறைவாசிகள் 4 பேருக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் அறிவுரை வழங்கி பேசியதாவது:-

பல்வேறு சூழ்நிலை காரணமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் ஜெயிலில் தண்டனை அனுபவிக்கின்றனர். அவர்களின் நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடியும் முன்பே விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறாக விடுதலையாகும் நபர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது. முன்னாள் சிறைவாசிகள் தொழில் தொடங்க இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரவேற்கத்தக்கது. இந்த நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி அவர்கள் எஞ்சிய காலத்தில் மீதமுள்ள வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும்.

சிறையில் கைதிகளை நடத்தும் விதம் குறித்தும், சிறைச்சட்டங்கள் குறித்தும் சிறை அலுவலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும், அவர்களின் வேறுபாடுகளை எவ்வாறு கண்டறிவது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆயுள் தண்டனை கைதிகள், நன்னடத்தை கைதிகளை அடையாளம் கண்டால் அவர்களது தண்டனையை குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஆப்காவில் பயிற்சி பெற்று வரும் 85 சிறை அலுவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க மாநில பொருளாளர் ஞானேஸ்வரன், அரசு குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி, வேலூர் நன்னடத்தை அலுவலர்கள் சரவணன், பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Next Story