ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்கள் நடுநிலையாக பணியாற்ற வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவு அலுவலர்கள் நடுநிலையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் அறிவுறுத்தி உள்ளார்.
பரமக்குடி,
பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதனைகலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 27 மற்றும் 30-ந்தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 1,819 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 35 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 550 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் 14,552 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். 2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப் படும். தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை கையாளுதல் உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடவடிக்கைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இந்த அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டு 2 கட்ட பயிற்சிகள் நிறைவு பெற்றுள்ளன.
வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கப்படும் வாக்குச்சாவடிக்கான தேர்தல் படிவங்கள், தளவாட சாமான்கள் அனைத்தும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களது வாக்குப்பதிவின் ரகசியத்தினை பாதுகாத்திடும் வகையில் வாக்குப்பெட்டியினை அமைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகளில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி கடை பிடித்து நடுநிலையாக தங்களின் பணியை ஆற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகலா, செந்தாமரைச்செல்வி, சந்திரமோகன், சண்முகநாதன், தாசில்தார் சதீஷ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருவாடானை
திருவாடானை யூனியனில் வருகிற 27-ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி யூனியனுக்கு உட்பட்ட 188 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 1,250 தலைமை வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் சி.கே.மங்கலத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு திருவாடானை தாசில்தார் சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலன் வரவேற்றார். முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஜெயமுருகன், ரவி, தமிழ்செல்வன், விஜி ஆகியோர் கலந்து கொண்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் ஒளிவழி படக்காட்சிகள் மூலம் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து வாக்குப்பெட்டிகளை கையாளும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிநாதன், சுப்ரமணியன், வன்மீகநாதர், சுபா, கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நயினார்கோவில்
இதேபோல நயினார்கோவில் யூனியன் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உதவி இயக்குனர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால், பத்மினி, சுமதி, கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் தேர்தலுக்கு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், வாக்குப்பதிவு முடிவடைந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகளுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காசாளர் நாகலிங்கம், சேது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story