காரைக்குடி, இளையான்குடியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
காரைக்குடி மற்றும் இளையான்குடியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கமிட்டி, காரைக்குடி நகர இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் முஸ்லிம்களையும், தமிழர்களையும் வஞ்சிக்கும் பாரதீய ஜனதா அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் இருந்து மாபெரும் பேரணி புறப்பட்டது. பேரணியில் கருப்புக்கொடி ஏந்தியும், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் பல்லாயிரக்கணக்கானோர் முதல் போலீஸ் பீட், அண்ணா சிலை, செக்காலை ரோடு வழியாக ஐந்து விளக்கு பகுதியை அடைந்தனர். அங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதில் காரைக்குடி ஐக்கிய ஜமாத் செயலாளர் அலி மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் கலீல் ரஹ்மான், காரைக்குடி ஐக்கிய ஜமாத் கவுரவத்தலைவர் ஹனிபா, தலைவர் முகைதீன் பிச்சை, பொருளாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி. எம்.எல்.ஏ., கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன், திரைப்பட இயக்குனர் கவுதமன், கிறிஸ்துவ முஸ்லீம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் அமல்ராஜ், காரைக்குடி நகர இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அப்பாஸ், செயலாளர் ராஜாமுகமது, பொருளாளர் ஷாஜகான், காரைக்குடி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ராசகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச் செயலாளர் பி.எல். ராமச்சந்திரன், திராவிடர் கழக மாநில பேச்சாளர் பிராட்லா, ஆதித்தமிழர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகசெல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம், மார்க்்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அனைத்து ஜமாத்தார்கள், அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோவில் திடலில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளையான்குடி அனைத்து ஜமாத் மற்றும் உலமா சபையை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் காதர்மீரா தலைமை தாங்கினார். ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் முகம்மது இபுராஹிம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மதியரசன், மாரியப்பன், கென்னடி மற்றும் முகம்மது ஜாபர், முகம்மது ரோஸ்லான், முகம்மது ஜமீம், அல்அமீன், அய்யாச்சாமி, ஜேம்ஸ்வளவன், அழகர்சாமி, அபூபக்கா்சித்திக் மற்றும் புலிப்பாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் தி.மு.க. நகர செயலர் நஜீமுதீன், துருக்கி ரபீக்ராஜா, உஸ்மான்அலி அம்பலம், ராவுத்தர்நயினார் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story