சிதம்பரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் செடிகள் தயார்


சிதம்பரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் செடிகள் தயார்
x
தினத்தந்தி 22 Dec 2019 3:30 AM IST (Updated: 22 Dec 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் பகுதியில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக மஞ்சள் செடிகள் தயார் நிலையில் உள்ளன.

அண்ணாமலைநகர், 

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது கரும்பு, மஞ்சள் செடிகள் தான். ஒவ்வொரு தமிழர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்போடு கொண்டாடுவார்கள்.

அன்றைய தினம் வீட்டு வாசலில் கோலமிட்டு, அடுப்பு வைத்து மண்பானையில் பொங்கலிட்டு கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த வகையில் தைபொங்கல் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்பு எவ்வாறு முக்கிய இடம் பெற்றுள்ளதோ? அதேபோல் மஞ்சள் செடிகளுக்கும் தனி இடம் உண்டு.

அந்த வகையில் மணம் மிகுந்த மஞ்சளை ஆண்டுதோறும் சிதம்பரம் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகைக்காக இந்தாண்டும் சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், வல்லம்படுகை உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.

சிதம்பரம் பகுதியில் பருவமழை ஓரளவுக்கு பெய்ததன் காரணமாக மஞ்சள் செடிகள் தற்போது நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் வகையில் மஞ்சளை சாகுபடி செய்து வருகிறோம். இந்தாண்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மஞ்சளை பயிரிட்டு பராமரித்து வந்தோம். தற்போது பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து பொங்கல் பண்டிகைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மஞ்சள் செடிகளை அறுவடை செய்து, அதனை விற்பனை செய்வோம் என்றனர்.


Next Story