செய்யாறில் வீச்சரிவாளுடன் 2 வாலிபர்கள் சிலரை துரத்தியதால் பரபரப்பு - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


செய்யாறில்  வீச்சரிவாளுடன் 2 வாலிபர்கள் சிலரை துரத்தியதால் பரபரப்பு - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:00 AM IST (Updated: 22 Dec 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு பஸ் நிலையம் எதிரில் வீச்சரிவாளுடன் 2 வாலிபர்கள் சிலரை வெட்ட துரத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

செய்யாறு, 

செய்யாறு பஸ் நிலையம் எதிரில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு பெரிய வீச்சரிவாளுடன் சிலரை வெட்டுவதற்காக ஆக்ரோ‌‌ஷத்துடன் இறங்கி ஓடினர்.

இதனை பார்த்த பொதுமக்களும், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளும் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். மேலும் அங்கிருந்த வியாபாரிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் கதி கலங்கி நின்றனர்.

2 வாலிபர்களும் வெட்ட வந்த நபர்களை விடக்கூடாது என்று துரத்திக்கொண்டு ஓடினர். அதற்குள் அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தனர். சிறிது நேரம் சுற்றி சுற்றி வந்த 2 வாலிபர்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வியாபாரிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் செய்யாறில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story