கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் எடை குறைவான நவீன ரெயில்பெட்டிகள் - விரைவில் இணைக்கப்படுகின்றன
கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் எடை குறைவான நவீன ரெயில் பெட்டிகள் விரைவில் இணைக்கப்படுகின்றன.
கோவை,
கோவையில் இருந்து தினமும் காலை 6.10 மணியளவில் சென்னைக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதில் விரைவில் எடை குறைவான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இது போன்ற ரெயில் பெட்டிகள் ஏற்கனவே கோவையில் இருந்து சென்னைக்கு இரவில் செல்லும் சேரன் எக்ஸ்பிரசில் இணைக்கப்பட்டு உள்ளன. அந்த புதிய ரெயில் பெட்டிகள் கோவை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதிய ரெயில் பெட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்கனவே சாதாரண ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த ரெயில் பெட்டியின் எடை சுமார் 36 டன் ஆகும். ஆனால் புதிதாக சேர்க்கப்பட உள்ள நவீன ரெயில் பெட்டி பழைய பெட்டியை விட 15 சதவீதம் எடை குறைவாக இருக்கும்.
இந்த பெட்டி முழுக்க முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது. துரு பிடிக்காது. புதிய ரெயில் பெட்டியில் பேட்டரிகள் இருக்காது. ரெயில் பெட்டியின் எடையில் பெரும் பகுதியை இந்த பேட்டரிகள் தான் ஆக்கிரமித்து இருக்கும். ஆனால் புதிய பெட்டியில் பேட்டரிகள் இல்லாததால் எடை மிகவும் குறைவாக இருக்கும்.
பழைய பெட்டி மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்லும். ஆனால் புதிய ரெயில் பெட்டி எடை குறைவாக இருப்பதால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் செல்லும். புதிய பெட்டியில் பேட்டரிகள் இல்லாததால் விளக்கு, மின்சார விசிறி ஆகியவற்றை இயக்குவதற்கு தேவையான மின்சாரம் ரெயிலுக்கு மேலே செல்லும் மின்சார வயரில் இருந்து எடுத்துக் கொள்கிறது.
மின்சார ரெயில் ஓடுவதற்கு தேவையான மின்சாரத்தை என்ஜின் மேல் உள்ள கம்பி மூலம் வயரில் இருந்து எடுத்துக் கொள்வது போல பெட்டி களுக்கு தேவையான மின்சாரமும் அதில் இருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பழைய ரெயில் பெட்டிகள் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஓவர் ஆயிலிங் செய்ய வேண்டும். ஆனால் புதிய ரெயில் பெட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓவர் ஆயிலிங் செய்தாலே போதுமானது.
புதிய பெட்டி பழைய பெட்டியை விட 1.7 மீட்டர் நீளம் அதிகமாக இருக்கும். இதனால் அதில் கூடுதலாக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி இரண்டாம் வகுப்பு பெட்டியில் 108 இருக்கைகளும், குளுகுளு வசதி பெட்டியில் 78 இருக்கைகளும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் சங்க செயலாளர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணபாலாஜி ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை- பொள்ளாச்சி- பழனி -திண்டுக்கல்- மதுரை மார்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது கோவையில் இருந்து மதுரைக்கு நேரடி ரெயில் வசதி கிடையாது. ஆனால் கோவை-பொள்ளாச்சி-பழனி- திண்டுக்கல் வழியாக மதுரை செல்வதற்கு ரெயில் பாதை இருந்தும் அதில் போதிய எண்ணிக்கையில் ரெயில்கள் விடப்படவில்லை.
தற்போது கோவை- சென்னை இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் புதிய ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதால் ஏற்கனவே உள்ள பழைய ரெயில் பெட்டிகளை கோவை- மதுரை- நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயிலில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story