தூத்துக்குடி மாவட்டத்தில் பூத் சிலிப்கள் நாளை முதல் வழங்க நடவடிக்கை; கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பூத் சிலிப்கள் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் சம்பத், கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசும் போது கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 174 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 403 ஊராட்சி தலைவர்கள், 2,943 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 1,130 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக களத்தில் 7 ஆயிரத்து 137 வேட்பாளர்கள் உள்ளனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு 27-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் பிரசார நாட்கள் குறைவாகவே உள்ளது. பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள எந்தவொரு வாகனமாக இருந்தாலும் உரிய அனுமதி பெற வேண்டும். மேலும், அரசு மற்றும் பொது இடங்களில் சின்னங்கள் வரையவோ, நோட்டீஸ் ஒட்டவோ எவ்வித அனுமதியும் இல்லை. தனியார் சுவர்கள் மற்றும் இடங்களில் விளம்பரம் செய்ய அவர்களிடம் அனுமதி பெற்றே விளம்பரம் செய்யப்பட வேண்டும். வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் செலவு செய்ய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு வைத்துள்ளது. செலவு கணக்குகள் அனைத்தையும் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 18004254508 என்ற இலவச எண்ணிற்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்தால் உடனுக்குடன் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பிரசாரத்தின் போது சாதி, சமய, மொழி உணர்வுகளை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது. வேட்பாளர்களின் தனிப்பட்ட நடவடிக்கை குறித்து பிரசாரம் செய்யக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் 374 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
வேட்பாளர்கள், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஏஜெண்டுகளை விரைந்து நியமிக்க வேண்டும். வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். பூத் சிலிப்கள் வாக்காளர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் சம்பத் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கு அதிகபட்ச செலவின தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த செலவின தொகைக்குள் செலவு செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்திட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கீதாஜீவன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சந்திரன், தி.மு.க. ரவி, இந்திய தேசிய காங்கிரஸ் ராஜா, பா.ஜனதா சிவராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சி தேர்தல்) சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) பொற்செழியன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story