ராஜபாளையம் அருகே, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை - கடிதம் சிக்கியது-உறவினர்கள் மறியல்
ராஜபாளையம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதப்படி அவரது கணவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலரான இவரது மூத்த மகள் அஸ்வினிக்கும்(வயது29), தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த சிவசக்திவேலு என்பவரது மகன் அருணாசலத்துக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அருணாசலம் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு அனன்யா(5), சிவஆறுமுகவேல் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அஸ்வினி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரை கணவருடன் சேர்த்து வைப்பதற்காக, பெற்றோர் பல முறை முயன்றுள்ளனர். அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அஸ்வினி யாருக்கும் தெரியாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிகாலை குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு பெற்றோர் அஸ்வினியின் அறைக்குள் சென்று பார்த்த போது, அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
கடிதத்தில், தனது தற்கொலைக்கு மாமியார் சிவகாமிசுந்தரி, மாமனார் சிவசக்திவேலு மற்றும் கணவரின் தங்கை மகேஸ்வரி ஆகியோர் காரணம் என குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.. இது குறித்து போலீசாரிடம் அஸ்வினியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அஸ்வினி உடலை தெற்கு போலீசார் பிரேத பரிசோனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு நாக சங்கர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததன் பேரில் 30 நிமிடம் நடந்த மறியலை கைவிட்டனர்.
Related Tags :
Next Story