மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? எடியூரப்பா விளக்கம்


மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? எடியூரப்பா விளக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2019 5:43 AM IST (Updated: 22 Dec 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது பற்றி முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

மங்களூரு, 

மங்களூருவில் 19-ந்தேதி நடந்த வன்முறை சம்பவம் பற்றி நேரில் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த என்ன காரணம் என்பது பற்றி விளக்கம் அளித்தார்.

அதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மங்களூருவில் கடந்த 19-ந்தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்துமீறி போலீஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். மேலும் போலீஸ் நிலைய ஆயுதக்கிடங்கில் இருந்த ஆயுதங்களை கைப்பற்ற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இருப்பினும் அவர்கள் போலீசார் மீது தாக்கினர்.

இதனால் நிலைமை எல்லை மீறி சென்றது. இதனால் போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர சட்ட அதிகாரத்தின் படி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்படி எவ்வாறு நிவாரணம் கொடுக்க வேண்டுமோ அதன்படி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு வீடு இல்லை என்றால், வீடு கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

என்னை இன்று (அதாவது நேற்று) கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள் சந்தித்தனர். அவர்கள் ஊரடங்கு உத்தரவை தளர்த்த கோரிக்கை வைத்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகிறார்கள். மங்களூருவில் நடந்த வன்முறை காரணமாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைதி திரும்பி வருகிறது. எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்களை தொந்தரவு செய்ய கூடாது எனவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் போலீசாரை அறிவுறுத்தி இருக்கிறேன்.

23-ந்தேதி ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தையோ அல்லது திருமண விழாக்களையோ தடை செய்ய கூடாது என்றும், அவர்களுக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்கவும் கூறியுள்ளேன். பெங்களூருவில் என்னை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து பேசினர். மேலும் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அரசு எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனர். அதன்படி அவர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

ஆனால் மங்களூருவில் அதற்கு மாறாக நடந்துள்ளது. இதனால் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் பத்திரிகையாளர்கள் எனக் கூறி மங்களூருவுக்கு வந்தனர். ஆனால் அவர்களிடம் பத்திரிகையாளர் அடையாள அட்டை இல்லை. இதனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story