குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் பேரணி - மாநில தலைவர் தகவல்


குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் பேரணி - மாநில தலைவர் தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2019 3:45 AM IST (Updated: 23 Dec 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து 29-ந்தேதி திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் பேரணி நடத்தப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திண்டுக்கல், 

இந்து முன்னணி சார்பில் தேச பணியில் 1,000 பேர் என்ற நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்தது. இதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கும், உள்துறை மந்திரி அமித்‌ஷாவுக்கும் இந்து முன்னணி வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த எந்த மதத்தினருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர்.

சில ஊடகங்களும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை மட்டுமே முன்னிலை படுத்துகின்றன. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நடைபெறும் ஊர்வலத்தையோ, பிரசார கூட்டங்களையோ அவை கண்டுகொள்வதில்லை. பொதுமக்கள் மனதில் இந்த சட்டம் குறித்த எதிர்மறையான கருத்துகளை பதிய வைக்கவே சில அரசியல் கட்சிகள் முயல்கின்றன.

இதனை தடுக்கும் வகையில் இந்து முன்னணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக வருகிற 29-ந்தேதி, திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் பேரணி நடத்தப்பட இருக்கிறது. இதில் குறைந்தபட்சம் 40 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன், நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட அமைப்பாளர் சங்கர்கணே‌‌ஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story