காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 23 Dec 2019 4:30 AM IST (Updated: 23 Dec 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பென்னாகரம்,

கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், மெயின் அருவியில் இரும்பு தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததாலும் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 300 கன அடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்று கர்நாடக, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் காவிரி கரையோரம் குளித்தனர்.

அனுமதி வழங்க வேண்டும்

பாதுகாப்பு உடை அணிந்து சுற்றுலா பயணிகள் கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி வழியாக மணல் திட்டு வரை உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் தொங்கு பாலம், மீன் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போலீசார் காவிரி கரையோரம், மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், வெள்ளப்பெருக்கின் காரணமாக மெயின் அருவி பகுதியில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தது. இதனால் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த தடை உத்தரவு 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. அருவி பகுதியில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story