ஆலங்குளம் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு பேத்தி இறந்ததால் பெண் தற்கொலை
டெங்கு காய்ச்சல் பாதித்த பேத்தி இறந்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். விவசாயி. இவரது மனைவி உத்தமி(வயது 50). இவர்களது மகள் உஷாராணி திருமணமாகி ஆலங்குளம் அருகேயுள்ள நவநீதிகிருஷ்ணபுரத்தில் கணவர் நாராயணனுடன் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு வாணிஸ்ரீ(7) என்ற மகள் உண்டு. இவள் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளாள். ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பெற்றோர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி, கடந்த 10-ந் தேதி சிறுமி இறந்தாள். பேத்தி மீது பாட்டி உத்தமி அளவு கடந்த பாசம் வைத்து இருந்தாராம். அடிக்கடி அவர் பேத்தியை வந்து பார்த்து செல்வாராம்.
இந்த நிலையில், சிறுமி காய்ச்சலுக்கு இறந்தது முதல் உத்தமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினரிடமும் அவர் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு பேத்தி இறந்ததால் மனமுடைந்த ெபண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story