காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை தந்தை வெறிச்செயல்


காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 Dec 2019 4:45 AM IST (Updated: 23 Dec 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை வெட்டிக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணப்பா (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மகன் லோகே‌‌ஷ் (32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கலா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும்.

திருமணத்திற்கு முன்பு லோகே‌‌ஷ் சென்னையில் செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு லோகே‌‌ஷ் வேலைக்கு செல்லவில்லை. மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. லோகே‌‌ஷ் மது குடித்து விட்டு வந்து தனது தந்தை கிரு‌‌ஷ்ணப்பா மற்றும் தாய் ராதம்மாள் ஆகியோரிடம் பணம் கேட்டும் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். மகனின் செயலால் வெறுப்படைந்த கிரு‌‌ஷ்ணப்பாவும், அவரது மனைவி ராதம்மாளும் ஓசூரில் உள்ள தனது மகள் மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிரு‌‌ஷ்ணப்பா சானமாவு கிராமத்திற்கு வந்தார். அப்போது குடிபோதையில் வந்த லோகே‌‌ஷ் தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த லோகே‌‌ஷ் கீழே கிடந்த கட்டையை எடுத்து கிரு‌‌ஷ்ணப்பாவை தாக்க முயன்றார்.

ஆனால் கிரு‌‌ஷ்ணப்பா அந்த கட்டையை பிடுங்கி லோகேசின் தலையில் அடித்தார். மேலும் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து லோகேசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த லோகே‌‌ஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மகனை கொன்ற கிரு‌‌ஷ்ணப்பா உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லோகேசின் மனைவி கலா கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரு‌‌ஷ்ணப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story