உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு திண்ணை பிரசாரம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவு திரட்டினார்


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு திண்ணை பிரசாரம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவு திரட்டினார்
x
தினத்தந்தி 22 Dec 2019 10:30 PM GMT (Updated: 22 Dec 2019 9:41 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் திண்ணை பிரசாரம் செய்தார்.

சிவகாசி, 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராபட்டி, மீனம்பட்டி, அனுப்பன்குளம், போஸ்காலனி, நாரணாபுரம், முதலிபட்டி உள்பட 12 பகுதிகளில் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ராமசாமிபுரம், பூச்சக்காபட்டி, போஸ்காலனி உள்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் திண்ணை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியி்ல் அமைச்சர் பேசியதாவது:- நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

சிவகாசி கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீரை நான் கொண்டு வரமுடியாது என்று எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தனர். நான் கொடுத்த வாக்குறுதிபடி தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீரை கொண்டு வந்துள்ளேன். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 650-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 100 கிராமங்களில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இன்னும் 20 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் செய்ய வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்கள் விரும்பும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். பட்டாளிகள், படைப்பாளிகள், நெசவு தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் முதல்-அமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களையும் வாக்காளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story