ஆப்பக்கூடல் அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை - கள்ளக்காதலை கண்டித்ததால் விபரீதம்
ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்,
திருப்பத்தூர் மாவட்டம் மற்றம்பள்ளியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 43). அவருடைய மனைவி கார்த்திகா (28). இவர்களுக்கு சோலிகா (6) என்ற பெண் குழந்தை உள்ளது.
கார்த்திகா அதே பகுதியில் உள்ள மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் கார்த்திகாவும் அந்த வாலிபரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் 2 பேரும் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே சென்னிமலைகவுண்டன்புதூருக்கு வந்து அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர்.
இதற்கிடையே மனைவி கார்த்திகா காணாததால் சத்தியமூர்த்தி பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கார்த்திகா, தனது கள்ளக்காதலனுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் சென்றார். அப்போது உறவினர்கள் கார்த்திகாவின் கள்ளக்காதலை கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று காலை அவர் மட்டும் சென்னிமலைகவுண்டன்புதூரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
மனம் உடைந்த அவர் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story