உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 127 நுண்பார்வையாளர்கள் நியமனம் - கலெக்டா் சி.கதிரவன் தகவல்


உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 127 நுண்பார்வையாளர்கள் நியமனம் - கலெக்டா் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2019 10:45 PM GMT (Updated: 22 Dec 2019 9:42 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 127 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு, 

உள்ளாட்சி தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ள வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் தொடர்பாக வரப்பெறும் அனைத்து புகார்களையும் உடனடியாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பறக்கும்படை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 127 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆண், பெண் வாக்காளர்கள் தனித்தனியே வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும். வாக்குப்பெட்டி நன்றாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். போதுமான அளவில் அழியாத மை உள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும். 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் ஒரு மண்டல குழுவிற்கு ஒரு மண்டல அலுவலர், அலுவலக உதவியாளர், வாகன டிரைவர் என 3 பேர் வீதம் 135 குழுக்களில் 540 நபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை மண்டல அலுவலரிடம் பெற்று கொள்ள வேண்டும். அவர்களிடம் வாக்குச்சீட்டுகளை சரிபார்த்து வாங்க வேண்டும். வாக்குப்பதிவு செய்ய தடுப்புகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர்கள் முதல்நாளே வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும், அவர்களின் சின்னங்களும் வாக்காளர்கள் அறியும் வகையில் அமைக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடியில் நுழைய அனுமதி உள்ளவர்கள் தேர்தல் தொடர்பான அலுவலர்கள், வேட்பாளரின் முகவர்கள், வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தை, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு துணையாக வரும் ஒருவரை மட்டும் வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கலாம்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குப்பெட்டி காலியாக இருப்பதை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும். வாக்குப்பெட்டி உள்ளேயும், வெளியேயும் முகவரிசீட்டு ஒட்டவேண்டும்.

வாக்குச்சீட்டு செலுத்தும் துவாரம் தடையின்றி இருத்தல் வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள நான்கு வகை வாக்குச்சீட்டுகளின் ஒவ்வொன்றின் முதல் எண்ணையும், முடிவு எண்ணையும் குறித்து கொள்ள வாக்குச்சாவடி முகவர்களை அனுமதிக்க வேண்டும். இந்த பணிகளை நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தினேஷ் (பொது), ஜெகதீஷ் (வளர்ச்சி), முருகன் (உள்ளாட்சி தேர்தல்), வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ் (உள்ளாட்சி தேர்தல்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story