மனைவியை கொன்றுவிட்டு வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியவர் கைது


மனைவியை கொன்றுவிட்டு வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியவர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2019 4:36 AM IST (Updated: 23 Dec 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொலை செய்துவிட்டு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை பரேலில் உள்ள மகாலெட்சுமி கட்டிடத்தில் வசித்து வருபவர் அஜய்(வயது43). இவரது மனைவி சவிதா(43). அஜய் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று சவிதா குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி, அவரை அஜய் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் சவிதா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து டாக்டர்கள் போய்வாடா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக அஜயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவத்தன்று வீட்டில் அஜயும் அவரது மனைவியும் மது குடித்துள்ளனர். அப்போது, அஜய் சவிதாவை தன்னுடன் சாப்பிடும் படி கூறியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சவிதா சாப்பிட மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த அஜய் குடிபோதையில் மனைவியின் தலையை பிடித்து சுவரில் மோதி உள்ளார். இதில் படுகாயமடைந்த சவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து கொலையை மறைப்பதற்காக அஜய் வீட்டில் இருந்த தடயத்தை அழித்துவிட்டு, சவிதாவின் உடலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று குளியல் அறையில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அஜயை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story