கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி: கடையநல்லூர் பகுதியில் பட்டா மாறுதல் தற்காலிகமாக நிறுத்தம் - கலெக்டர் ஷில்பா தகவல்


கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி: கடையநல்லூர் பகுதியில் பட்டா மாறுதல் தற்காலிகமாக நிறுத்தம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:15 AM IST (Updated: 23 Dec 2019 7:47 PM IST)
t-max-icont-min-icon

கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடைபெறுவதால் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பட்டா மாறுதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

நெல்லை, 

பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அரசு இ–சேவை மூலமாக பெறப்பட்டு தமிழ் நிலம் மென்பொருள் வாயிலாக மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பட்டா மாறுதல் செய்யப்பட்டு வருகிறது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் பெயரை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இப்பணியின் போது அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நில அளவை புல எண்கள், பட்டாதாரர் விவரங்கள் கணினி சர்வருக்கு புதிய தென்காசி மாவட்ட குறியீட்டுடன் தாசில்தாரின் மின்னணு கையொப்பத்துடன் மாற்றப்பட வேண்டி உள்ளது.

இந்த மேம்படுத்தும் பணிக்காலத்தில் தமிழ் நிலம் மென்பொருளை தற்காலிகமாக 15 நாட்களுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என நெல்லை தேசிய தகவலியல் மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் கம்ப்யூட்டர் சர்வரில் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

இந்த பணி முதற்கட்டமாக கடையநல்லூர் வட்டாரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து அனைத்து தாலுகாக்களிலும் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

இதனால் கடையநல்லூர் பகுதியில் 15 நாட்களுக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது. இந்த கால கட்டத்தில் ஏற்கனவே இ–சேவை மூலம் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பாதிப்படையாது.

புதிய மாவட்டம் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், அந்த விண்ணப்பங்கள் உரிய பரிசீலனை செய்யப்பட்டு பட்டா வழங்கப்படும். பட்டா மாறுதல்களை தவிர்த்து இதர இ–சேவைகள் மூலம் அதாவது சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பிற சேவைகள் தங்கு தடையின்றி வழங்கப்படும். கடையநல்லூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் இந்த பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story