மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை பராமரிப்பு பணியில் மெத்தனம் - அதிகரிக்கும் விபத்துகளால் பறிபோகும் உயிர்கள்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை பராமரிப்பு பணியில் மெத்தனப்போக்கு நிலவுவதால் வாகன விபத்துகள் அதிகரித்து, உயிர்பலி ஏற்பட்டு வருகிறது.
தேனி,
தேனி மாவட்டத்தில் சாலையில் குவிந்து கிடக்கும் மண், கற்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கான தீர்வாக சாலைகள் முழுமையாக பராமரிக்கப்படுவது இல்லை. குறிப்பாக தேனி, பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் அதிக அளவில் மண் படிந்துள்ளது. அத்துடன் சில இடங்களில் ஜல்லிக்கற்களும் பெயர்ந்து சாலையோரம் பரவி கிடக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரபாண்டியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் ஒரு தம்பதி சென்று கொண்டு இருந்தனர். எதிரே அசுர வேகத்தில் லாரி வருவதை பார்த்து பிரேக் பிடிக்க முயன்றபோது சாலையில் கிடந்த மண்ணால் மோட்டார்சைக்கிள் சரிந்து, லாரியின் சக்கரத்தில் அந்த தம்பதியினர் சிக்கி உயிரிழந்தனர். குழந்தை காயத்துடன் தப்பியது.
சில மாதங்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் கிடந்த மண் சறுக்கியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 பேர் மீது லாரி ஏறியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இதுபோல், பலர் சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணால் சறுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
தேனியில் கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையம் திரும்பும் சாலையில் ஜல்லிக்கற்கள் பரவிக் கிடக்கிறது. இந்த சாலையில் கடந்த வாரம் ஸ்கூட்டரில் குழந்தையுடன் சென்ற பெண் சறுக்கி கீழே விழுந்தார். பின்னால் வாகனங்கள் எதுவும் வராததால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை பராமரிப்பு பணியில் மெத்தனப்போக்கு நிலவுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியாகும் நிலைமை உள்ளது. எனவே சாலைகளை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story