நெமிலியில் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டரிடம் மனு


நெமிலியில் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 Dec 2019 4:00 AM IST (Updated: 23 Dec 2019 9:50 PM IST)
t-max-icont-min-icon

நெமிலியில் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்‌ஷினியிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 352 மனுக்கள் பெறப்பட்டன.

நெமிலியில் இருந்து வந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், நெமிலி-ஓச்சேரி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகே அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், கோவிலும் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், கோவிலுக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நித்தியானந்தம் கொடுத்துள்ள மனுவில், ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் விபத்துக்களை தடுக்கும் வகையில் மேம்பாலம் அல்லது ரவுண்டானா அமைத்து தர வேண்டும். ராணிப்பேட்டை 30-வது வார்டில் நாய், பன்றி, மாடுகளால் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் நாய், பன்றிகளால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்.

நெமிலி தாலுகாவில் குப்பக்கல்மேடு, வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கல் உடைக்கும் குவாரி உள்ளது. இந்த கல்குவாரிகளை ஏலம் விட வேண்டும் என்று கல் உடைக்கும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில், கடந்த மக்கள் குறைதீர்வு நாளில் மனு அளித்த ராணிப்பேட்டையை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு முதியோர் உதவித்தொகை, கத்தியவாடியை சேர்ந்த வளர்மதி என்பவருக்கு விதவை உதவி தொகை, ஆற்காடு பகுதியை சேர்ந்த இலக்கியா என்பவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் திவ்யதர்‌ஷினி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story