சாலையை கடந்து செல்ல முயன்றபோது பஸ் மோதி காவலாளி பலி - பொதுமக்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு


சாலையை கடந்து செல்ல முயன்றபோது பஸ் மோதி காவலாளி பலி - பொதுமக்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 4:00 AM IST (Updated: 23 Dec 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

சாலையை கடந்து செல்ல முயன்றபோது பஸ் மோதி காவலாளி பலியானார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், பெரிய ஆண்டவர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 40). இவர், திருமழிசை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் பகுதியில் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்தவுடன் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். காவலாளி மீது மோதிய ஆந்திர மாநில பஸ்சின் கண்ணாடியை அவர்கள் அடித்து நொறுக்கினர்.

மேலும் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் கற்களை வரிசையாக அடுக்கி வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் சிக்னல் இல்லாததால்தான் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. இங்கு உடனடியாக சிக்னல் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடுபாபு தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணிநேரம் கழித்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

பின்னர் பலியான பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story