வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 17 லட்சத்து 95 ஆயிரம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்


வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 17 லட்சத்து 95 ஆயிரம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 24 Dec 2019 3:45 AM IST (Updated: 23 Dec 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 17 லட்சத்து 95 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

திண்டுக்கல், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2020-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த பட்டியல், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 8 லட்சத்து 78 ஆயிரத்து 62 பேரும், பெண்கள் 9 லட்சத்து 16 ஆயிரத்து 960 பேரும், இதரர் 152 பேர் என மொத்தம் 17 லட்சத்து 95 ஆயிரத்து 174 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும், ஆர்.டி.ஓ. அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி, தாசில்தார் அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படும் இதில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இணையதளம் மூலம் படிவம் 6 ஏ- வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்வதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இந்த முகாம்களில் வாக்காளர்கள் கலந்துகொண்டு வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம். புதிதாக வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விரும்புபவர்களும் இந்த முகாம்களில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணியபிரசாத் மற்றும் அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story